ATM முதல் காசோலை கட்டணம் வரை: அமலுக்கு வந்துள்ள SBI புதிய விதிகள் என்ன? - Asiriyar.Net

Tuesday, July 6, 2021

ATM முதல் காசோலை கட்டணம் வரை: அமலுக்கு வந்துள்ள SBI புதிய விதிகள் என்ன?

 




இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு எஸ்.பி.ஐ வங்கி விதித்துள்ள புதிய விதிகள் உள்ளிட்டவற்றை விரிவாக காண்போம்!


ஏடிஎம் கட்டணங்கள்!


புதிய விதிகளின்படி, எஸ்பிஐயின் சேமிப்பு மற்றும் டெபாசிட் கணக்கு வாடிக்கையாளர்கள் இனி ஒரு மாதத்தில் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுத்துக்கொள்ள முடியும். 4 முறைக்கு மேல், ஐந்தாம் முறையில் இருந்து ஏடிஎம் அல்லது வங்கிக் கிளை மூலமாகவோ பணம் எடுத்தால், எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த முறை இன்று முதல் தொடங்குகிறது.


காசோலை கட்டணம்!

புதிய விதிகளின்படி, எஸ்பிஐயின் சேமிப்பு மற்றும் டெபாசிட் கணக்கு வாடிக்கையாளர் இனி ஒரு ஆண்டுக்கு 10 காசோலை (செக்) தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். 10க்கும் மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி,


10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் + GST கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவே 25 காசோலைகள் அடங்கிய புத்தக பரிவர்த்தனைக்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.


டிடிஎஸ் பிடித்தம்!

இதற்கிடையே, மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அரசு அடுத்த மாதத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 50,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என்பதால் வருமான வரித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.


சிண்டிகேட் வங்கி IFSC இயங்காது!

இதேபோல் சிண்டிகேட் வங்கி IFSC கோடுகள் இன்று முதல் நடைமுறையில் இல்லை. சமீபத்தில் தான் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகள் இன்று முதல் இயங்காது என கனரா வங்கி முறையாக அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கு சென்று IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.



Post Top Ad