சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.
சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, 85 ஆயிரம் வரை வந்துவிட்டது. இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், விதிகளுக்கு உட்பட்டு தங்களால் இயன்ற வழிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அணுகி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியை க.ரேவதி தலைமையிலான ஆசிரியைகள் தங்கள் சொந்த செலவில், தாம்பூலத் தட்டில் பழங்கள், இனிப்புகள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை சீர் வரிசையாக கொண்டு சென்று, மாநகராட்சி பள்ளியில் சேர விரும்பும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த இக்கட்டான சூழலில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தங்களால் இயன்ற வழிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் சமூக வலைத்தளங்களிலும், மாநகராட்சி பள்ளியின் சிறப்புகளை பதிவிட்டு வருகிறோம். இதன் காரணமாக ஜூலை 8-ம் தேதி வரை பிற பள்ளிகளில் இருந்து 15,334 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது மொத்த மாணவர் எண்ணிக்கை 96,931 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிடும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புதான் மாணவர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு மேல் இருந்தது. அதன் பிறகு தற்போது 1 லட்சத்தை கடக்க உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களை கையாளும் அளவுக்கு இடவசதி உள்ளது. அதனால் மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.