சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, மறதிநோய், மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம்.
ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதைவிட அதிகமான அபாயம் உள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன.
இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து லட்சம் நோயாளிகளின் மின்னணு மருத்துவ தரவை ஆய்வு செய்தனர். அப்போது கீழுள்ள காரணங்கள் உள்பட பொதுவான 14 உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர்:
மூளை ரத்தக்கசிவு
பக்கவாதம்
பார்கின்சன்
குய்லின்-பார் நோய்க்குறி
மறதிநோய்
மனநோய்
மனநிலை கோளாறுகள்
இவற்றில் பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது. மேலும் இவை மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுபவம் சார்ந்த மன அழுத்தத்தினாலேயே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment