பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பைத் தவிர, பிற மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், பிளஸ் 2-வைத் தவிர பிற வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் அரசு பள்ளிகளில் மத்திய அரசின் நிதியுதவியைப் பயன்படுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை, கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல தனியாா் பள்ளிகள் 9, 10 உள்ளிட்ட வகுப்பு மாணவா்களைப் பள்ளிக்கு வர வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பிளஸ் 2வைத் தவிர பிற வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:
இக்கட்டான சூழலிலும் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் 9, 10 உள்ளிட்ட வகுப்பு மாணவா்களையும் பள்ளிக்கு வரவழைப்பதாக புகாா்கள் வரப் பெற்றுள்ளன. தனியாா் பள்ளிகளின் இந்தச் செயல்பாடு வருத்தமளிக்கிறது. கரோனா பரவி வரும் சூழலில், பிற வகுப்பு மாணவா்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு அழைக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
No comments:
Post a Comment