தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வை தள்ளி வைக்கலாமா என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பிளஸ் 2 மாணவர், மாணவிகளை தவிர மற்றவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மட்டும் தற்போது தேர்வுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தேர்தல் நடந்து மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதாலும் பிளஸ் 2 தேர்வை நடத்துவதில் சிரமம் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
அதனால், பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், குறித்தும் எவ்வளவு பேர் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மையங்கள், அவற்றில் தேர்தல் பணிக்கான இடங்கள் எத்தனை என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களை தேர்வு எழுத வரவழைப்பது சிரமமாக இருக்கும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், சுகாதாரத்துறையின் கருத்தை கேட்ட பிறகு பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் தேர்தல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ஜூன் மாதம் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment