இரத்த தானம்... யாரெல்லாம் செய்யலாம்?... யாரெல்லாம் செய்யக்கூடாது? - Asiriyar.Net

Saturday, December 7, 2019

இரத்த தானம்... யாரெல்லாம் செய்யலாம்?... யாரெல்லாம் செய்யக்கூடாது?
இரத்த தானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்கு பயன்படுத்தி கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவதாகும்.

இரத்த தானத்தை பெறுபவருக்கு மட்டுமல்ல கொடுப்பவருக்கும் நன்மைகள் ஏற்படுகின்றன.

இரத்த தானத்தின் தேவை :

அறுவை சிகிச்சையின்போதும், விபத்தின்போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டும் இரத்தம் தேவைப்படுகிறது.

சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.

இரத்த தானம் யாரெல்லாம் செய்யலாம்?

45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.

இரத்த தானம் யாரெல்லாம் செய்யக்கூடாது?

மாதவிடாய் காலங்களில், கர்ப்பக்காலங்களில் உள்ள பெண்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

பாலூட்டும் தாய்மார்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

மது அருந்தியவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

எய்ட்ஸ், சர்க்கரைநோய், இரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

இரத்த தானம் செய்தால் உண்டாகும் நன்மைகள் :

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

உடலில் இயற்கையாக புதிய இரத்தம் உற்பத்தியாகி, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன்மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறைவாக இருக்கும். மேலும், உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

இரத்த தானம் செய்வதன் மூலம் எந்தவொரு பின்விளைவுகளும் ஏற்படாது.

Post Top Ad