போகி, பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று பொங்கல் பண்டிகைக்கு வருடம்தோறும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் வர்ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று ஜனவரி 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.
அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும். அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பள்ளிகளில் தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு, 'பொங்கல் பண்டிகையை நீக்கும் முயற்சி', 'இது பாஜக அரசின் சூழ்ச்சி' என்றெல்லாம் கண்டனங்கள் வலுத்தது. நிலைமை விவரீதமாவதை உணர்ந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ''பிரதமர் மோடி பேசுவதை கேட்க மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே கேட்கலாம். பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று அவசரமாக விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, ''இது கட்டாயமல்ல. வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பாரத பிரதமரின் உரையை பள்ளிகளில் வந்து கேட்கலாம் என்றுதான் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது''என்று டுவிட்டர் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.