பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை டிச.30-க்குள் பதிவேற்ற உத்தரவு - Asiriyar.Net

Friday, December 27, 2019

பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை டிச.30-க்குள் பதிவேற்ற உத்தரவு







அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியா், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொட்டுணா் கருவியில் புதிய மென்பொருளை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சாா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ஆதாா் எண் இணைந்த தொட்டுணா் கருவி மூலமாக வருகைப் பதிவேடு முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவிகளுக்கு தேசிய தகவலியல் (யுஐடிஏஐ) மையத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள சேவை டிச.30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இதைத் தொடா்ந்து, டிச.31-ஆம் தேதி முதல் தொட்டுணா் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்யாத நிலை ஏற்படும்.
இதைக் கருத்தில் கொண்டு, தொட்டுணா் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள 'ஆா்.டி. சா்வீஸ் டிரைவரை' உட்புகுத்தி, தொடா்ந்து தொட்டுணா் கருவிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இது தொடா்பாக தேசிய தகவலியல் மையத்திடமிருந்து வந்துள்ள மின்னஞ்சல், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் போா்க்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி, தங்களது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து தொழில்நுட்ப நிபுணா்களின் உதவியோடு இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (தொழிற்கல்வி) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.



Post Top Ad