2020 ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கவிருக்கிறது. புத்தாண்டில் நாம் எச்சரிக்கையாக இருக்க எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் ஆண்டைக் குறிப்பிடுவதிலேயே கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இந்த ஆண்டில் ஆவணங்களில் தேதியை முழுமையாக குறிப்பிடுவதில் மக்கள் கவனமாக இருப்பது நல்லது. புது ஆண்டு பிறந்து சில நாள்களுக்கு நமக்குத் தேதியைக் குறிப்பிடுவதில், எழுதுவதில் சற்றுக் குழப்பம் ஏற்படுவதும் முந்தைய ஆண்டையே குறிப்பிடுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதையும்தாண்டி புத்தாண்டில் தேதியைக் குறிப்பிடும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
இதற்கு முன்னதாக தேதியில், வருடத்தைக் குறிப்பிடும்போது, சுருக்கமாக 01/01/18 அல்லது 01/01/19 என குறிப்பிடுவோம்.
அதாவது 2019 யை '19' என்றும் 2018யை '18' என்றும் குறிப்பிடுவோம். ஆனால், வரும் ஆண்டு 2020 என்பதால் நீங்கள் அதனை சுருக்கமாக 01/01/20 என எழுதினால், பிற்காலத்தில் தேவையற்ற சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
தேதியில் சுருக்கமாக வெறுமனே 20 எனக் குறிப்பிட்டால் இந்த 20-க்குப் பின்னால் ஏதேனும் இரண்டு எண்களைச் சேர்த்து வசதிக்கேற்ப எழுதிக்கொள்ள முடியும். 20 என எழுதினால், அதன் பின் இரு எண்களைச் சேர்த்து அதை 2001-லிருந்து 2019 வரை எந்த ஆண்டாக வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். எனவே, ஏதாவது ஆவணத்தில் கையெழுத்திடும்போதோ, எங்கேனும் தேதியைக் குறிப்பிடும்போதோ முழுமையாக எழுதுவதே பாதுகாப்பானது.
2020 ஆம் ஆண்டில் இப்படியொரு சங்கடம். எனவே, தேதியைக் குறிப்பிடுவதில் எச்சரிக்கையாக இருங்கள்!