தேர்வு வாரியம் வெளியிட்ட ஆவணங்கள்... அரசு கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு...? - Asiriyar.Net

Sunday, December 1, 2019

தேர்வு வாரியம் வெளியிட்ட ஆவணங்கள்... அரசு கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு...?




அரசு கணினி ஆசிரியர் தேர்வில் பெறும் அளவிற்கு முறைகேடு நடந்து இருக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் சந்தேகங்களை எழுப்பி, தேர்வர்கள் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, 822 கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கணினி வழியிலேயே நடந்தது . மாநிலம் முழுவதும் நடந்த இந்த தேர்வில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட பல மையங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் மறியல் போராட்டங்கள் எல்லாம் நடத்தினர் . இதன் காரணமாக சில மையங்களில் ஜூன் 27ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது.


பெரும் குழப்பங்களுக்கு நடுவே இதன் எழுத்து தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட உடனே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.


1,560 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலை ஆய்வு செய்த தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றனர்.

1. வரிசையாக பல தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானது எப்படி?

2. ஒரே அறையில் தேர்வு எழுதியவர்கள் தான் இப்படி தேர்வு பெற்றுள்ளனர்; இது எப்படி சாத்தியம்?

3. சான்றிதழ் சரிபார்ப்புக்கான பதிவு எண்கள் என்பது வேறு; தேர்வுக்கான பதிவு எண்கள் வேறு, என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தேர்வுக்கான பதிவு எண்களும், சான்றிதழ் சரிபார்ப்புக்கான பதிவு எண்களும் ஒன்றுதான். ஆசிரியர் தேர்வு வாரியம் தவறான தகவலை தெரிவிப்பது ஏன்?

4. தேர்வர்களுடைய இட ஒதுக்கீடு முறையை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? வெளிப்படையாக அறிவித்தால் யார் யாருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளிப்படையாகவே தெரிந்திருக்கும். அது, முறைகேடுகளை தவிர்க்க உதவியிருக்கும்.
இப்படி பல்வேறு சந்தேகங்களை கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் எழுப்புவதால், இதில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்பதும் அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

குறிப்பாக மறுதேர்வு நடத்தப்பட்ட போது பல மையங்களில் தேர்வர்கள் , தேர்வு கண்காணிப்புக்கு வந்த அதிகாரிகளும் ஒன்றாக கூடி விவாதித்து தேர்வை எழுதிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. எனவே அதுபோன்ற மறு தேர்வு மையங்களில் பங்கேற்ற தேர்வர்கள் பெருமளவில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் இடம் பிடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தேர்வர்கள் எழுப்பியுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், சந்தேகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Post Top Ad