தேர்தல் அலுவலர்களுக்கு உழைப்பூதிய தொகை; யார் யாருக்கு எவ்வளவு?- நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு - Asiriyar.Net

Wednesday, December 18, 2019

தேர்தல் அலுவலர்களுக்கு உழைப்பூதிய தொகை; யார் யாருக்கு எவ்வளவு?- நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு





தேர்தலில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கான உழைப்பூதிய தொகை நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் 27,30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் நீங்கலாக மீதம் உள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை வரையறை செய்ததுடன் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது. வாக்குச்சாவடிக்குத் தேவைப்படும் வசதிகள் குறித்து அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, பதவி உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப உழைப்பூதிய தொகையை நிர்ணயித்து தேர்தல் ஆணையம் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று நிதித்துறை முதன்மை கணக்கு அதிகாரி அலுவலகத்தில் இருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வாக்குச்சாவடி தலைமை அதிகாரிக்கு பயிற்சி, வாக்குப்பதிவு மற்றும் முந்தைய நாளுக்கான கட்டணம், உணவு உட்பட தேர்தல் பணிக்காக மொத்தம் ரூ.2ஆயிரத்து 50வழங்கப்படுகிறது.

வாக்குப்பதிவு மைக்ரோஅப்சர்வர்க்கு ரூ.1000, வாக்குப்பதிவு அலுவலர் ஒன்று முதல் 5 வரையிலான அலுவலர்களுக்கு தலா ரூ.1,550-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வாக்காளர்களுக்கு மை வைத்தல், பெட்டியில் வாக்குகளை உள்ளே தள்ளிவிடும் உதவியாளர்களுக்கு தலா ரூ.600ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களை அடையாளம் காட்டக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.800ம், கிராம உதவியாளர்களுக்கு ரூ600ம் வழங்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியைப் பொறுத்தளவில் கண்காணிப்பாளர்க்கு ரூ.850, உதவியாளர்க்கு ரூ.650, மைக்ரோ அப்சர்வர்க்கு ரூ.450, அலுவலக உதவியாளர்க்கு ரூ.300ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகையானது மூன்றுநாள் பயிற்சி, தேர்தலுக்கு முந்தையநாள் வாக்குச்சாவடியில் தங்குதல், உணவு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இத்தொகை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நாளே இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad