3.8 செ.மீட்டர் பெட்டி; இரண்டே பொருள்கள்!' -விண்வெளிப் போட்டியில் அசத்திய சிதம்பரம் மாணவர்கள் - Asiriyar.Net

Thursday, December 19, 2019

3.8 செ.மீட்டர் பெட்டி; இரண்டே பொருள்கள்!' -விண்வெளிப் போட்டியில் அசத்திய சிதம்பரம் மாணவர்கள்






இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளையொட்டி, செயற்கைக்கோள் வடிவமைப்புப் போட்டியை அறிவித்தது தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழு. அரசு மற்றும் அரசின் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டியில், செயற்கைக்கோள் மூலம் புவியிலிருந்து எடுத்துச்செல்லும் பொருள்களை பரிந்துரைக்க வேண்டும்.

 செயற்கைக்கோள்
அந்தப் பொருள்கள் புதுமையாக இருப்பதோடும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் 3.8 செ.மீ அளவுள்ள பெட்டிக்குள் பொருந்தும்படி அந்தப் புதிய கண்டுபிடிப்பு இருக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன.

இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிதம்பரம் ஆறுமுக நாவலர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த 9 பொருள்களில் 2 பொருள்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.



இதன்மூலம் அப்பள்ளியின் 2 மாணவர் குழுக்கள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதல் குழுவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் ராகுல், வசந்தபிரியன், நவீன்ராஜ் மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் கீர்த்திவாசன், சூரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் தலைவர் ராகுல் இதுகுறித்துப் பேசுகையில், ``நாங்கள் சிமென்டை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறோம். சிமென்ட்டால் கட்டப்பட்ட சுவர், தளம் போன்றவற்றை இடித்து தரையில் போட்டுவிடுகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளைப் போல, அவையும் மழைநீர் நிலத்துக்குள் செல்வதைத் தடுத்துவிடுகிறது. அதனால் இந்தச் சிமென்டை விண்ணுக்கு அனுப்பி, அங்கு அதற்கு ஏற்படும் மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரீட் கழிவுகளை அழிக்கவும் மறுசுழற்சி செய்வதற்கான வழிகளையும் கூடுதலாக ஆய்வு மேற்கொள்ள முடியும்'' என்றார்.



2-வது குழுவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மன்னன், சிவா மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் சுதர்சன், 9-ம் வகுப்பு மாணவர் அகமதுகான் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்தக் குழுவின் தலைவரான 10-ம் வகுப்பு ரகுராம் பேசுகையில், ``நாங்கள் பென்சிலின் என்ற உயிர் வேதிப்பொருளை அனுப்ப இருக்கிறோம். விண்வெளியில் தங்கி ஆய்வு செய்யும் வீரர்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகள், புவியிலிருந்து ராக்கெட் மூலமாக அனுப்பப்படுகின்றன.

அந்த வகையான மருந்துகளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேர விரயத்தையும் பொருள் செலவையும் பெருமளவில் குறைக்கலாம். அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பென்சிலின் என்ற பூஞ்சையை விண்ணுக்கு அனுப்ப இருக்கிறோம். மேலும் விண்வெளியின் வளர்நிலை மாற்றங்கள் குறித்து ஆராயவும் இது பயன்படும்" என்றார் உற்சாகமாக.


Post Top Ad