2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள்
தலைமைப் பொறுப்பை அடைய நினைப்பவர்களே!
தலைமைப் பொறுப்பை அடைய நினைப்பவர்களே!
ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அழகு, ஆரோக்கியம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் - 12-ல் இருப்பதால், திடீர் பயணங்களும், அலைச்சலும் ஏற்படும்.சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் மனக் கசப்புகள் அதிகரிக்கும்.
12.2.19 வரை ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் இருப்பதால், மறைமுக நெருக்கடிகள், தாயாருக்கு முதுகுத் தண்டவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ல் கேது அமர்வதால், பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவைப்படும். அவருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் அதிகரிக்கும். தடைப்பட்ட விஷயங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்த வருடம் முழுவதும் சனி 9-ல் இருப்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அவசியமான செலவுகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.
வருடம் பிறக்கும்போது புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்களாலும் அதிகரிக்கும் செலவுகளாலும் திணறுவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டில் அமர்வதால், செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ செய்வீர்கள். தந்தையுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்கள் வகையில் லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! குரு 8-ல் இருப்பதால் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இடமாற்றம் ஏற்படக்கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மாணவர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடன் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கலைத்துறையினரே! சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், புகழும் கௌரவமும் கூடும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
வருடத்தின் முற்பகுதி மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பிற்பகுதி சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: கோவை மாவட்டம் தாளக்கரை தண்டுக்காரன்பாளையம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தரிசிப்பது நல்லது.
நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவர்களே!
ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நழுவவிடாமல் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
வருடம் பிறக்கும்போது ராசிக்கு 11-ல் செவ்வாய் இருப்பதால்,செல்வம், செல்வாக்கு உயரும். அனுபவப்பூர்வமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சகோதரர்கள் அன்புடன் இருப்பார்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் மனவருத்தங்களும் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை வேண்டாம். யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவேண்டாம்.
சுக்கிரன் 6-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
இந்த வருடம் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 7-ல் இருந்துகொண்டு ராசியைப் பார்ப்பதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ல் மறைவதால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் ஏற்படும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். அவசியமான செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். யாருக்கும் எதற்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வதால், அடிக்கடி கோபம் ஏற்படும். கடந்த கால ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். மூன்றாவது நபர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டாம். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற மனபிரமை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
வியாபாரிகளே! வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் ஏற்படக்கூடும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.
சிந்தித்து முடிவெடுக்கும் சுபாவமுள்ளவர்களே!
வருடம் பிறக்கும்போது ராசிக்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேரவேண்டிய பங்கு கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.
வருடம் பிறக்கும்போது செவ்வாய் 10-ல் இருப்பதால் புதுப் பொறுப்பும் பதவியும் தேடி வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழி உறவுகள் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சூரியனும் ராசிநாதன் புதனும் 7-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
12.2.19 வரை ராசிக்கு 20ல் ராகு மற்றும் 8-ல் கேது இருப்பதால், எதிலும் பிடிப்பற்ற போக்கு காணப்படும். பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகும். பழைய கடன் பிரச்னைகளை நினைத்து அடிக்கடி வருத்தப்படுவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், எதிலும் ஒருவித அச்ச உணர்வு, படபடப்பு, செரிமானக் கோளாறு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தி உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை ராசிக்கு 6-ல் குரு இருப்பதால், வேலைச்சுமை இருந்தபடி இருக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய ஃபைல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வக்கிக் கடனுதவி கிடைக்கும். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள்.
வருடம் முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் - மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும்.
வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியுடன் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி - இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் தொலைநோக்குச் சிந்தனைகள் பலராலும் பாராட்டப்படும். ஆனாலும் அவ்வப்போது அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனக் கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களும் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாறுதல் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.
மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கலைத்துறையினரே! உங்கள் கலைத்திறன் வளரும். பாராட்டுகளுடன் பரிசுகளும் கிடைக்கும்.
இந்த வருடம் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம் நஞ்சை மகத்து வாழ்க்கை என்னும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். .
கனிவாகப் பேசி அனைவரையும் கவர்பவர்களே!
ராசிக்கு 4-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கியப் பிரமுகர்களின் வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரைகுறையாக நின்றுவிட்ட கட்டடப் பணியை மறுபடியும் கட்டி முடிக்கத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால் தொட்ட காரியம் வெற்றியடையும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் பத்திரப் பதிவு செய்யாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக மின்சார சாதனங்களை வாங்குவீர்கள்.
12.2.19 வரை ராசிக்கு 7-ல் கேதுவும் ராசிக்குள் கேதுவும் நிற்பதால், மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும் கேது 6-லும் இருப்பதால், மனப் போராட்டங்கள் ஓயும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உ றவினர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை சரியாகப் புரிந்துகொள்வீர்கள்.
ராசிக்கு 6-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருடத் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.20.19 வரை குரு ராசிக்கு 5-ல் இருப்பதால், நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர் கல்வி, உத்தியோகம் சிறப்பான முறையில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட ஒருமுறைக்கு இரண்டுமுறை போராடித்தான் முடிக்கவேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் பகை ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலர் தங்களுடைய ஆதாயத்துக்காக உங்களைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்புவார்கள் என்பதால் கவனம் தேவை.
வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டி வருவார்கள். பாதியில் நின்ற கட்டடப் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் ஏற்படும்.
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிப்பார்கள். லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பணிச்சுமை அதிகரிக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.
வருடத்தின் முற்பகுதி அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு உமையாம்பிகை சமேத அருள்மிகு உடையீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட்ட பிரச்னைகள் அகலும்.
எதிலும் புதுமையை விரும்புபவர்களே!
ராசிக்கு 3-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். ராசிக்கு 5-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு பயனுள்ளதாக அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதப் போக்கு மாறும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
12.2.19 வரை ராசிக்கு 6-ல் கேது இருப்பதால், உங்களுடன் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்வீர்கள். மகான்கள், ஆன்மிக அறிஞர்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஆனால், ராசிக்கு 12-ல் ராகு இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களை எண்ணி அடிக்கடி வருந்துவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்ட முயற்சி செய்யவும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், ராகு 11-ல் இருப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வீர்கள்.
வருடம் முழுவதும் சனி 5-ல் இருப்பதால், அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும்.
ராசிக்கு செவ்வாய் 8-ல் நிற்கும்போது வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 4-ல் இருப்பதால், வேலைச்சுமையின் காரணமாக எப்போதும் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ல் குரு இருப்பதால், மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். வருமானத்தை உயர்த்திக்கொள்ள புதுப் புது வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கு திரும்பக் கிடைக்கும்.
வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வாங்கவும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரிசி, மலர்கள், எலெக்ட்ரிகல்ஸ், வாகன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக்கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது. உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு தள்ளிப் போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.
வருடத் தொடக்கம் அலைச்சலையும் வருடத்தின் மத்திய பகுதியிலிருந்து முன்னேற்றத்துடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.
பரிகாரம் : விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை சஷ்டி திதி நாளில் சென்று தரிசித்து வழிபட மகிழ்ச்சி பெருகும்.
மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் நிலையில் வருடம் பிறப்பதால், பணவரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். உற்சாகமாக வலம் வருவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
ராசிநாதன் புதன் சாதகமான வீட்டில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால்,நண்பர்களின் உதவி கிடைக்கும். நல்ல வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வீட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகள் நீங்கும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று மொழி பேசுபவரின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வக் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
இந்த வருடம் முதல் 12.2.19 வரை ராசிக்கு 5-ல் கேது இருப்பதால், பிள்ளைகள் அடிக்கடி கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்கவேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால் சுற்றியிருப்பவர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
வருடம் முழுவதும் சனி சாதகமாக இல்லாத காரணத்தால் மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் களவு போக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளால் மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 3-ல் நிற்பதால், புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேளைகள் பார்க்க நேரிடும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்திலும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால், இழுபறியாக இருக்கும் வேலைகள் முடியும். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.
வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாள் களால் நிம்மதி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி - இறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.பெரிய வியாபாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆனால், அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.
மாணவர்களே! கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைப்போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர் அரவணைத்துச் செல்வார்கள்.
இந்த வருடம் மனநிம்மதியையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம் : கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!
சுக்கிரனும் சந்திரனும் உங்கள் ராசிக்குள் இருக்கும்போது வருடம் பிறப்பதால், இங்கிதமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவரிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும். அவ்வப்போது உடல்நலன் சிறிதளவு பாதித்து உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.
12.2.19 வரை ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் இருப்பதால், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துகள் வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ல் அமர்வதால், புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்களுக்குள் ஒரு சுயக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். ஆனால், ராகு 9-ல் இருப்பதால், சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தடை ஏற்பட்டு நீங்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.
செவ்வாய் 6-ல் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், மனப் போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்கிப் போவார்கள். பேச்சில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படும். பாதிப் பணம் தந்து கிரயம் செய்யாமல் இருந்த சொத்தை மீதிப் பணத்தைத் தந்து பத்திரப்பதிவு செய்து கொள்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வருடம் முழுவதும் சனி 3-ல் இருப்பதால், திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளரும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அனைத்து வகைகளிலும் நன்மை உண்டாகும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் குரு அமர்வதால், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும்.
வியாபாரிகளே! போட்டிகளையும் கடந்து லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாள்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும். ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! 13.2.19 முதல் அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் அதிகம் உழைக்கவேண்டி வரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க சற்று போராடவேண்டி இருக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனதுக்குப் பிடித்தமான வகையில் இடமாறுதல் கிடைக்கும்.
மாணவர்களே! சாதித்துக் காட்டவேண்டும் என்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற உழைப்பும் வேண்டும். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழித் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே!வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் தைரியமாக இருப்பீர்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
இந்தப் புத்தாண்டு பணவரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக இருக்கும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிசக்தி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட, பிரச்னைகள் குறைந்து வெற்றிகள் சேரும்.
தன்மானத்துடன் வாழ விரும்புபவர்களே!
உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன கனவுகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை இதமாகப் பேசி சமாளிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை ராசிக்கு 3-ல் கேது இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராசிக்கு 9-ல் ராகு இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அடிக்கடி வீண் டென்ஷன் ஏற்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 13.2.19 முதல் கேது 2-லும், ராகு 8-லும் இருப்பதால், மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் பாதச் சனி நடப்பதால், பல் வலி, காது வலி ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளை எதற்கும் வற்புறுத்தவேண்டாம். கூடுமானவரை அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியிடங்களில் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
ராசிநாதன் செவ்வாய் 5-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசியில் அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள்காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் பிடிப்பின்மை ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கி இருந்த உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வீர்கள்.
வியாபாரிகளே! வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
மாணவர்களே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
இந்த வருடம் உங்கள் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக இருக்கும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.
இரக்க சுபாவம் கொண்டவர்களே!
ராசிக்கு லாபவீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பாதியில் நின்றுவிட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்பு ஏற்படும். அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
12.2.19 வரை ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனம் தெரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். கண், காது, பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். ஆனால், தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசியவற்றை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிய நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். தூக்கமின்மை, படபடப்பு, கனவுத் தொல்லை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்துகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் கௌரவிக்கப்படுவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு உங்கள் ராசியில் ஜன்ம குருவாக இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறு வந்து நீங்கும். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
வியாபாரிகளே! லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாள்களால் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால் மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும்.
கலைத்துறையினரே! உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடக்கும் உங்களின் படைப்பு வெளியாக சில முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வார்கள்
இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுங்கள். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
கலாசாரத்தை விட்டுக் கொடுக்காதவர்களே!
ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
செவ்வாய் 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் கைக்குக் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் சில காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள்.
12.2.19 வரை ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 12-லும் ராகு 6-லும் இருப்பதால், மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வருடம் முழுவதும் சனி விரயச் சனியாக இருப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் உறக்கம் குறையும். கடந்து போன கசப்பான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப் படுவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு லாப வீட்டில் இருப்பதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். புதுப் பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு 12-ல் மறைவதால், வீண்செலவுகளால் கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். திடீர் பயணங்கள் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்படும். பழைய கடன்களை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
வியாபாரிகளே! விரயச் சனி தொடர்வதால், புதுத் தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதுடன், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாள்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளை திரும்பப் பெறுவீர்கள்.
மாணவர்களே! படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பது அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் வருடமாக அமையும்.
பரிகாரம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு லட்சுமி கோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது முன்னேற்றம் தருவதாக அமையும்.
பிறரின் நிறைகளை மட்டும் பார்ப்பவர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
வருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.
12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.2.19 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால், அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும்.பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்று ஓர் அச்சம் மனதை வாட்டும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.
வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு அனுபவத்தாலும் சமயோசித அறிவாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்.
மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே!
சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க ஆபரணம், விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும். ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.
வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 10.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.
வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினரே! உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
இந்த வருடம் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.