'ஆன்லைன்' வகுப்புகள் - பெற்றோருக்கு போலீசார் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 13, 2021

'ஆன்லைன்' வகுப்புகள் - பெற்றோருக்கு போலீசார் வேண்டுகோள்

 




ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்களை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்' என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



கொரோனா பரவல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதனால், மாணவர்களிடம் கணினி மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. வகுப்பு நேரம் தவிர, விடுமுறை நாட்களில் கூட மாணவர்கள் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கின்றனர். அப்போது, சைபர் கிரைம் தொடர்பான குற்றவாளிகளிடம் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடுகிறது.



எனவே, கணினி, ஸ்மார்ட் போன், ஐ போன் என, தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் மாணவர்களை, அவர்களுக்கே தெரியாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில், தங்களின் படங்களை பகிர அனுமதிக்கக் கூடாது. வீட்டு முகவரி, பள்ளியின் பெயர், மொபைல் போன் எண்கள் என, எந்த தகவலையும் வெளியிடக் கூடாது. பெற்றோரை தவிர வேறு நபர்களிடம், 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசிய குறியீடு எண்களை பகிரக்கூடாது. பெற்றோருக்கு தெரியாமல், ஆன்லைன் வாயிலாக பழகி, நபர்களை நேரில் சந்திக்கக் கூடாது. அச்சுறுத்தும் விதமாக அனுப்பப்படும் தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.



அதுபற்றி பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அதேபோல பெற்றோரும், ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை, அவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்க வேண்டும்.அவர்கள் ஆன்லைனில் இருக்கும் போது, உடன் இருந்து கண்காணிப்பது மிகவும் நல்லது.தனி அறை மற்றும் மறைவான இடங்களில் கணினி, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களை தங்களின் பார்வையில் படும்படி அமரச் செய்ய வேண்டும்.



ஆன்லைன் வகுப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வெளிநபர்களின் மிரட்டல், பாலியல் தொந்தரவு குறித்து குழந்தைகளிடம் இருந்து வரும் தகவல்களை அலட்சியம் செய்ய வேண்டாம்.உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையற்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் தெரியாதபடி, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றில், 'செட்டிங்ஸ்' பகுதியை பெற்றோர் சரி பார்க்க வேண்டும்' என்றனர்.




Post Top Ad