கொரோனா - தலைமையாசிரியை பலி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 9, 2021

கொரோனா - தலைமையாசிரியை பலி

 







கொடுமுடி அருகே கொரோனாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை பலியானார். அவரது கணவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.



தலைமை ஆசிரியை


கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 50). இவர் பெரிய செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.



உமாமகேஸ்வரி தேர்தல் சம்பந்தமான பயிற்சி மற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.




கொரோனாவுக்கு பலி

இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உமாமகேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது கணவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.



இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் தலைமை ஆசிரியை வசித்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


எச்சரிக்கை

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் கூறும்போது, ‘கொரோனா 2-வது அலை தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மிகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.



அனைவரும் தயவு செய்து முக கவசம் அணிய வேண்டு்ம். கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவ வேண்டும். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொதுமக்கள் அதிகமாக ஒரிடத்தில் கூட வேண்டாம். கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். இவற்றை அலட்சியம் செய்தால் உயிரிழப்பை தவிர்ப்பது மிகவும் கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.









Post Top Ad