அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் - தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 26, 2021

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் - தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை?

 



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும், பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



நோய் பரவல் சூழல் சரியான பின்னர், 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, செய்முறைத் தேர்வுகள் முடிந்தபின் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து, தேர்வுக்குத் தயாராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்நிலையில், தொற்று பரவல் தீவிரம் கருதி, விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுழற்சி முறையில் பணி



இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக, துறை செயலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசுத் தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும்வரை, சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வரவேண்டும்.


மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர அலுவல் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பில் உள்ளவர்கள், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் முதன்மைக் கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று, பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம்" என்றனர்.



அதேசமயம், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









Post Top Ad