முழு பொது முடக்கம் இல்லை : பிரதமர் மோடியின் முழு உரை - தமிழாக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 21, 2021

முழு பொது முடக்கம் இல்லை : பிரதமர் மோடியின் முழு உரை - தமிழாக்கம்

 







கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொது முடக்க அமலை தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.


அனைத்து கரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றினால் பொது முடக்கத்துக்கு அவசியம் இருக்காது; பொது முடக்கத்தை இறுதி வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.



நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர்  கூறியதாவது:


கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய யுத்தத்தில் இந்தியா மீண்டும் ஈடுபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் கரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஸ்திரமாக இருந்தது. அதன்பின்னர் அந்தத் தொற்றின் இரண்டாம் அலை உருவானது. தற்போது நாடு கரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆக்சிஜன்  கிடைக்க நடவடிக்கை: 



கரோனா தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள சவால் மிகப் பெரியது. அதனை நமது உறுதி, தீரம், ஆயத்த நடவடிக்கைகளால் கடந்து வர வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.


மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



சில நகரங்களில் கரோனா சிகிச்சைக்காக பெரிய அளவில் பிரத்யேக மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன.


நமது விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் கரோனா தடுப்பூசிகளை உருவாக்கினர். உலகிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட தடுப்பூசிகளை நாம் உருவாக்கினோம். நாட்டின் குளிர்பதன அமைப்புகளுக்கு ஏற்ப நம்மிடம் தடுப்பூசிகள் உள்ளன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் தடுப்பூசி சென்று சேர்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளின் உற்பத்தியை மருந்து உற்பத்தித் துறை ஏற்கெனவே அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய மருந்து உற்பத்தி ஏற்கெனவே அதிகரித்துள்ளது. இது மேலும் உயர்த்தப்பட்டு வருகிறது. 


மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதேவேளையில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதையும் உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.



சிறார்களுக்கு முக்கியப் பங்கு: பெரியவர்கள் உரிய காரணங்களின்றி வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துவதில் சிறார்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. தங்கள் பகுதிகளில் சிறு குழுக்களை உருவாக்கி கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இளைஞர்கள் உதவ வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள், பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படாது.



இன்றைய சூழ்நிலையில் பொது முடக்கத்திலிருந்து நாட்டைக் காக்க வேண்டும். நாட்டின் பொருளாதார நலனை காப்பதுடன், மக்களின் உடல்நலத்தையும் காக்க வேண்டும் இதை மாநில அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.  கரோனாவை கட்டுப்படுத்தும் மாநிலங்களின் நடவடிக்கையில் பொது முடக்கம் என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்க வேண்டும். பொது முடக்கத்துக்கு பதிலாக கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.



புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி


"புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆவன செய்யுமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே தொடர்ந்து தங்கியிருக்குமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

அடுத்த சில நாள்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்பதை அவர்களிடம் மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்றும் உறுதி அளிக்க வேண்டும்' என்றார் பிரதமர் மோடி.






Post Top Ad