ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 21, 2021

ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

 



இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.






இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது கூடுதலாக அனுமதிக்கப்படும் தளர்வுகள் எவை? என்பது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தொழிற்சாலைகளுக்கு விலக்கு


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, மாநிலத்தில் இரவுநேர பொது ஊரடங்கு அமல்படுத்தவும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.




இந்த அரசாணையில் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், தொடர் செயல்முறை தொழிற்சாலைகளுக்கும் இரவுநேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில், மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. மேலும், முக்கிய சேவைகள் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.



அனுமதிக்கப்படும் தளர்வுகள்

தளர்வுகள் மற்றும் தெளிவுபடுத்தலுக்கான பல்வேறு கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்த பிறகு, சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றின்போது சில கூடுதலாக தளர்வுகள் அனுமதிக்கப்படும் இனங்கள் வருமாறு:-



தொலைதொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்; தகவல்தொடர்பு, தகவல் தொடர்பான சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பணியாளர்கள் இரவுநேர பணிஅமர்வுக்கு அலுவலகத்தில் இருந்து செயல்படுதல்; மருத்துவ, நிதி, போக்குவரத்து மற்றும் பிற முக்கியமான சேவைகளின் பின்தள செயல்பாடுகளை ஆதரிக்க, தரவு மையங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்; பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் சேமித்தல் உள்ளிட்ட கிடங்கு நடவடிக்கைகள்; விலக்கு அளிக்கப்படாத பிற தொழிற்சாலைகளை பொறுத்தவரையில், தீ பாதுகாப்பு, எந்திர பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, தேவையான அத்தியாவசிய பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.



அத்தியாவசிய தொழிற்சாலைகள்


அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என்பவை, மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, அவற்றின் மூலப்பொருட்களுக்கான கூறுகள் மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகளாகும். 



கோழி, செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் தொழில்கள்; உரங்கள், விவசாய எந்திரங்கள் மற்றும் அவற்றின் கூறுகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள்; அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள், ஏற்றுமதி பொறுப்புறுதிகள் அல்லது ஏற்றுமதி ஆணைகள் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள்; பாதுகாப்பு துறைக்கு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்; பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் சுகாதார துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கூறுகளின் உற்பத்தி தொழிற்சாலைகள்; இவற்றுக்கான பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகும்.



தொடர் தொழிற்சாலைகள்

தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் என்பவை, சுத்திகரிப்பு நிலையங்கள்; பெரிய எக்கு ஆலைகள்; பெரிய சிமெண்ட் ஆலைகள்; வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட தொடர் செயல்முறை வேதியியல் தொழிற்சாலைகள்;சர்க்கரை ஆலைகள்; உரங்கள்; மிதவை கண்ணாடி ஆலைகள்; தொடர் செயல்முறையுடன் கூடிய பெரிய வார்ப்பாலைகள்; டயர் உற்பத்தி தொழிற்சாலைகள்; பெரிய காகித ஆலைகள்;செல்போன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்புகளுக்கான மின்னணு தொழிற்சாலைகள்; பெரிய வார்ப்பாலைகள்; பெயிண்ட் கடைகள் அல்லது பிற தொடர்ச்சியான செயல்முறைகளை கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள்; ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் ஆகியவை ஆகும்.



கடும் நடவடிக்கை

அனைத்து தொழில்களும் கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படும். போக்குவரத்து மற்றும் உணவு உண்ணும்போது கடைத்தளத்தில் போதுமான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்; முககவசங்களின் பயன்பாடு; பணியாளர்களின் சுகாதார கண்காணிப்பு; தடுப்பூசி போடுவதை ஊக்குவித்தல்; தேவையான கிருமிநாசினி மற்றும் சுகாதார நடவடிக்கைகள் ஆகியவை வலியுறுத்தப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Post Top Ad