10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என்பதில் துளியும் உண்மையில்லை: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 22, 2021

10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என்பதில் துளியும் உண்மையில்லை: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு

 






10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் கிடையாது. தேர்வு உள்ளதாக வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.



அதேநேரம், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் குழப்பம் நிலவுவதாலும் 10-ம் வகுப்பு மாணவர்களின் உயர் கல்விக்குப் பொதுத் தேர்வு மதிப்பெண் அவசியம் என்பதாலும் மாணவர்களுக்கு மாநில அளவிலோ, பள்ளிகள் அளவிலோ தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின.


அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தேர்வு என்ற செய்தி, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் செய்தி உண்மையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய அவர், ''இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் அறிவித்தார். எனினும் இதுகுறித்துத் தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், முதல்வரின் அறிவிப்பு சரியானதுதான் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது.



இதற்கிடையே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என்று அரசோ, தேர்வுத் துறையோ, பள்ளிக் கல்வித்துறையோ அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் யாருமே அறிவிக்காத இந்தச் செய்தியால், மாணவர்கள் குழப்பம் கொள்ள வேண்டாம்.



10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை. தவறான தகவலைப் பரப்புபவர்கள், உங்கள் வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் இருந்தால், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரும் இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.



Post Top Ad