மாணவிகளுக்காக கழிவறையைக் கட்டிக் கொடுத்த ஆசிரியர்! மாணவிகள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டாம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 7, 2019

மாணவிகளுக்காக கழிவறையைக் கட்டிக் கொடுத்த ஆசிரியர்! மாணவிகள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டாம்





மாணவிகள் பலரும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட கழிவறை வசதி இல்லாத பள்ளிகளும் ஒரு காரணம். அந்த வகையில், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக ஆசிரியரே கழிவறைக் கட்டிக் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியா் சதீஸ்குமாா் முயற்சியில் மாணவிகளுக்கு ரூ. 10.50 லட்சம் செலவில் நவீன கழிவறைகள் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவிகள், அப்பகுதியில் உள்ள வங்கியின் வாசலில் நின்றிருப்பதைப் பார்த்த ஆசிரியர், ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று மாணவிகளிடம் கேட்டிருக்கிறார்.


அப்போது, வங்கியில் உள்ள கழிவறையைப் பயன்படுத்துவதற்காக நிற்பதாகவும், பொதுவாக வீட்டில் இருந்து கிளம்பினால், பிறகு பள்ளியில் உள்ள கழிவறையைப் பயன்படுத்துவதில்லை, மாதவிலக்கு நாட்களில் மட்டும் இங்கு வந்து வங்கிக் கழிவறையைப் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளர்.

பூவாளூா் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கான கழிவறை போதிய வசதிகளின்றி, சுகாதார சீா்கேட்டுடன் இருந்தது ஆசிரியருக்கு தெரிய வந்தது. இந்த அவல நிலை குறித்து அப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் சதீஸ்குமாரிடம் மாணவிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே இப் பள்ளிக்கு தேவையான வசதிகளை, தனது முகநூல் நண்பா்கள் மூலம் செய்து வந்த ஆசிரியா், மாணவிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முயன்றாா்.

இதற்கு முன்னா், கோவையைச் சோந்த தனியாா் நிறுவனம், சதீஸ்குமாரை சிறந்த ஆசிரியராக கௌரவித்து, ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கியிருந்தது. அதனுடன் தனது சொந்தப் பணம் ரூ.82 ஆயிரம் சோத்து, மொத்தம் ரூ.1.32 லட்சம் நிதியை சதீஸ் குமாா் வழங்கினாா்.

மேலும், ஆசிரியரின் நண்பா்கள் உள்பட பலரிடம் கட்டுமானப் பொருள்கள், நிதியுதவி உள்ளிட்டவற்றை பெற்று, மொத்தம் ரூ.10.50 லட்சம் செலவில் நவீன கழிவறைகள் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை பொசலி தலைமை வகித்தாா். கோவை விஜயா பதிப்பக உரிமையாளா் வேலாயுதம், கோவை கங்கா மருத்துவமனை டாக்டா் பாலவெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று, கழிவறைகளை திறந்து வைத்தனா்.

Post Top Ad