தமிழக சட்டசபையில் முதன் முதலாக காகிதமில்லா 'இ-பட்ஜெட்' இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்குத் தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2021 - 22ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, பிப்ரவரி 23ஆம் தேதி, அப்போதைய துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன்பின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், 2021 - 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை, இன்று காலை 10 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட இருக்கிறது.
இதிலும், பட்ஜெட் உரை இடம் பெற்றிருக்கும். புத்தகத்தை புரட்டிப் படிப்பது போல, பக்கங்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் எம்.எல்.ஏ.,க்கள் நகர்த்தி உரையைப் பார்க்கலாம்.
இ-பட்ஜெட்
சட்டசபை தேர்தலின்போது, திமுக, பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து துறைகளையும் மேம்படுத்த, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறக்கூடும். அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதற்கான திட்டங்கள் என்ன என்பதும் இன்றைய பட்ஜெட்டில் தெரிய வரும். இன்று பட்ஜெட் உரையுடன், சட்டசபை நிறைவடையும். நாளை முதன் முறையாக, 2021 - 22ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது