பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், நாளை முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், ஆசியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க 37 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த 37 அலுவலர்களும் பள்ளிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்கள் வருகை எவ்வாறு இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவர்கள் கண்காணிக்க உள்ளனர்.