நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும். பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
அதற்கிணங்க, குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு 110 ரூபாய் என உயர்த்தப்படும். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயர்த்துவதில் அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். எனவே அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படும் இந்த அரசின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
நிலவும் நிதி நெருக்கடியினால் அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் கடினமாகிறது. அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து கவனமாக இந்த அரசு பரிசீலனை செய்து வருகிறது.