ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம், சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு - Asiriyar.Net

Monday, August 30, 2021

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம், சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு

 

சுழற்சி முறையில் வகுப்புகள்

* சானிடைசர், உடல்வெப்ப கருவிகள் தயார்

* சமூக இடைவெளியை கண்காணிக்க தனி குழு





சென்னை: கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, அனைத்து சானிடைசர், உடல்வெப்ப கருவிகள், சமூக இடைவெளியை கண்காணிக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை, கல்லூரிக் கல்வி இயக்ககம் செய்து  வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. 9 மாத இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கடந்த, ஜனவரி 2021ல் பிளஸ்2, பத்தாம் வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் இந்த ஆண்டும் மார்ச் மாதம் மீண்டும் 2ம் கட்டமாக கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கடந்த மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளை பொறுத்தவரையில் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது பல மாநிலங்களில் கொேராேனா தொற்று குறைந்து வருவதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்திலும், பள்ளிகள் கல்லூரிகளை திறக்க கடந்த வாரம் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்க அரசு முடிவு செய்திருந்தது.  மேலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னையில் தலைமைச் செயலகத்தில் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த 7ம் தேதி, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறைகளுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு முதன்மைச் செயலாளர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  


அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித்துறைக்கும் தற்போது அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறைக்கும் வந்துள்ளது. அதன்படி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தவும் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக,   50 சதவீத மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரும்  வகையில் சுழற்சி முறையின் கீழ் வகுப்புகளை நடத்தவும், ஒற்றைப்படை இரட்டைப்படை என மாணவர்களை பிரித்து சுழற்சி முறையில் வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளிவிட்டு மாணவர்கள் உட்கார வசதியாக இடைவெளியுடன் கூடிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.   உணவு வேளையின் போது மாணவ மாணவியர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சமூக இடைவெளியுடன் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். 1ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வாயிலிலேயே, உடல் வெப்ப நிலை கருவிகள் கொண்டு பரிசோதிக்கப்பட்ட பிறகு,  சானிடைசர்கள் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிந்து வந்தால் தான் வகுப்பறைக்கு செல்ல முடியும்.  


பள்ளிகள்  திறப்பதற்கு முன்னதாக பள்ளி வளாகங்களை, தூய்மை செய்யும் பணியும் தீவிரமாக நடக்கிறது.  வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து மாணவர்கள் உட்கார வேண்டிய இருக்கைகளும் தூய்மை செய்யப்படுகின்றன.  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் மனநலம் சீராகும் வகையில் உடற்பயிற்சி, உளவியல் பயிற்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து கடந்த சில  நாட்களாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி  போடும் பணிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடாமல்  வரும் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் போட ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.


கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில், கல்லூரிகளும் நாளை மறுநாள்  திறக்கப்பட உள்ளன. முதலாண்டு தவிர்த்து  இளநிலை பட்டப் படிப்புக்கான இதர  வகுப்புகள் வாரத்தில் 3 நாட்களும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான  வகுப்புகள் வாரம் 6 நாட்களும் நடக்கும். பல்கலைக் கழகங்கள், கலை அறிவியல்  கல்லூரிகள், தொழில் நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன் வளம், கால்நடை சார்ந்த கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்  படிப்புகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளும்  செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளன. மேலும், அதற்கான வழிகாட்டு  நெறிமுறைகளையும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad