தவறான இட்டுக்கட்டு செய்தியைப் பரப்பி மக்களைத் திசை திருப்பும் செயலை நிதி அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் இதுபோன்று அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எதிராகப் பேசிவரும் நிதியமைச்சரின் பேச்சினையும், செயலினையும் தரப்படுத்த வேண்டும் என்று என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் நெஞ்சம் நெகிழத் தேவையில்லை. வஞ்சம் இன்னும் மாறவில்லை எனத் தோன்றுகிறது. நிதி அமைச்சர் அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பற்றி சட்டப்பேரவையிலும், ஊடகங்களிலும் அவதூறாகப் பேசிவருகிறார். அரசு ஊழியர், ஆசிரியர்களை மக்களுக்கெதிராகத் திசை திருப்பும் வகையில் ஏளனமாகவும் பேசி வருகிறார்.
மேலும் தமிழக அரசின் நிதி அறிக்கையில் நிதி வருவாயில் ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு ஊடகங்களில் 1 ரூபாயில் 65 பைசா ஊதியம், ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற தவறான விவரங்களைப் பொது வெளியில் தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயன்று வருகிறார்.
எனவே, தமிழக அரசாங்கம் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறுவது, அதைத் தொடர்ந்து முறையாக வரி வசூலிப்பது மற்றும் தமிழக அரசின் நிதி நிலைமையைச் சீராக்க சாத்தியமான வழிவகைகளை ஆராயாமல் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக நிதி அமைச்சர் தொடர்ந்து தவறான தகவல்கள் மட்டுமின்றி செய்தி வெளியிட்டு வருவதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சஙகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளையும், தங்களது தேர்தல் வாக்குறுதியினையும் வெளிப்படைத் தன்மையுடன் பரிசீலித்து கோரிக்கைகளை / வாக்குறுதிகளை மொத்தமாக இல்லாவிடினும் கூடுமான அளவில் நிறைவேற்றும் சூழல் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறோம். அப்போதுதான் அரசு நிர்வாகமும், மக்கள் திட்டப் பணிகளும் தொய்வின்றி நடக்கும், சமூகத்தில் நலமும் வளமும் செழிக்கும்.
மேலும், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றோடு இன்றைய பேரிடர்க் காலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று ஊடகங்களில் உண்மைக்கு மாறான கருத்துத் திணிப்பு பரவலாக நிதி அமைச்சரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியம்-ஓய்வூதிய செலவினம் குறைந்து சுருங்கி வருவதும், மானிய செலவினம் உயர்ந்து வருவதைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
2006-07-இல் மொத்த வருவாய் செலவினத்தில் சம்பளம் மற்றும் ஊதியங்கள் 27.95 சதவீதமும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் 14.22 சதவிகிதமாக இருந்த நிலையில் 2020-21-இல் முறையே 24.92 சதவீதம் மற்றும் 10.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், 2009 மற்றும் 2017-இல் ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் ஊதிய மாற்றத்திற்குப் பிறகும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. நிதித்துறையின் வெள்ளை அறிக்கையில் அட்டவணை 41-இல் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் மானியங்கள் 12.65 சதவீதத்திலிருந்து 19.33 சதவீதமாக உயர்ந்துள்ளன.
எனவே நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டின் நிதிச்சுமை மற்றும் அளவற்ற கடன் சுமைக்கு எவ்வகையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் காரணமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எனவே இதுபோன்ற தவறான இட்டுக்கட்டு செய்தியைப் பரப்பி மக்களைத் திசை திருப்பும் செயலை நிதி அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தவறான பெருளாதாரக் கொள்கைகளும், நிதிப் பங்கீடும் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஆட்படுத்தியுள்ளன என்பதை அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறியாதவர்கள் அல்ல. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முதலீட்டுச் செலவு என்ற அடிப்படையில் ஊதியச் செலவிற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு பெறுவதற்கான நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உறுதுணையாக இருக்கும்.
No comments:
Post a Comment