குழந்தைகளின் படிப்பை விட, உயிர்தான் முக்கியம் என்பதால் இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆல் பாஸ் செய்து இருக்கிறார், என அமைச்சர் கருப்பணன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஜம்பைப் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், உற்சாகத்துடன் இரட்டை இலைக்குதான் வாக்கு என்று கூச்சலிட்டனர். அவர்கள் மத்தியில் அமைச்சர் கருப்பணன் பேசியதாவது:
குழந்தைகளின் படிப்பை விட, உயிர்தான் முக்கியம் என முதல்வர் கருதினார். அதனால் தான் கரோனா பரவலின்போது, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். வரும் கல்வி ஆண்டிலும் கரோனா தொற்று இருந்தால், மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில்தான் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இலவசக் கல்வியைக் கொடுத்த தமிழக அரசு, அதற்குப் பிறகு மருத்துவப் படிப்பு பயிலவும் வாய்ப்பு வழங்குகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவமாக முதல்வர் பழனிசாமி விளங்குகிறார். கிராமங்களை நகரங்களாக்கிட ஜெயலலிதா ஆசைப்பட்டார். அவரது எண்ணத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment