தனது செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து உத்தரவு - Asiriyar.Net

Tuesday, December 3, 2019

தனது செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து உத்தரவு




தனது செருப்பை தைப்பதற்காக மாணவர்களை அனுப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கஜுராஹத் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்குள்ள ஆசிரியர் ஒருவர், தனது செருப்பை தைத்து வரச்சொல்லி மூன்று மாணவர்களை கடைக்கு அனுப்பியுள்ளார். மூன்று குழந்தைகள் பையுடன் வந்ததை கவனித்த, அங்குள்ள உள்ளூர் நிருபர் ஒருவர், 'ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?' என்று மாணவர்களிடம் கேட்டபோது, ஆசிரியர் ரஜினி குப்தா, தனது செருப்புகளை தைத்துவரச் சொன்னதாக மாணவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதனை வீடியோ எடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சந்தோஷ் தேவ் பாண்டேவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் அந்த நிருபர்.

இதையடுத்து, தற்காலிக ஆசிரியர் ரஜினி குப்தா மற்றும் அவரது மூத்த ஆசிரியர் ரீனா குப்தா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

'குழந்தைகள் படிப்பதற்காகவே பள்ளிக்கு வருகிறார்கள், எந்தவொரு ஆசிரியரோ, ஊழியரோ அவர்களது சொந்த வேலைகளுக்காக மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு நடந்துகொள்ளும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையிலும், இதுபோன்ற நிலை தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது. அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதனைக் கண்காணிப்பது அவசியம் ஆகும்.

Post Top Ad