ஒரு பானை நிறைய புத்திசாலித்தனம் - அக்பர் கதை - Asiriyar.Net

Sunday, December 8, 2019

ஒரு பானை நிறைய புத்திசாலித்தனம் - அக்பர் கதை






அக்பரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிற்றரசனிடமிருந்து, அக்பருக்கு ஒருநாள் ஓலை வந்தது. அதில்,   'ஒரு பானை நிறைய புத்திசாலித் தனத்தை அனுப்பி வையுங்கள்' என்று எழுதியிருந்தது.  'புத்திசாலித்தனத்தை பானையில் போட்டு அனுப்புவதா?' என்று முதலில் கடிதம் எழுதிய சிற்றரசன் பேரில் கோபப்பட்டார். பின்னர் இவ்வாறு கோபப்படுவதில் பயனில்லை. நாம் கோபப்பட்டு சிற்றரசனுக்கு பதில் கடிதம் எழுதினால் பிறகு, இவர் என்ன பேரரசர்..! ஒரு பானை நிறைய அறிவுத் திறனை அனுப்பச் சொன்னதற்கு இம்மாதிரி கோபப்படுகிறாரே..! என்று அவன் நம்மைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்யலாம். அதுவுமில்லாமல், முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். இம்மாதிரி விதண்டாவாதமான வேண்டுகோளுக்கு, விதண்டாவாதமாக பதில் அளிப்பதே சரியான செய்கையாகும். அதை விட்டுவிட்டு அனாவசியமாக அவன் பேரில் கோபப்பட்டு பயனில்லை என்று கருதிய சக்கரவர்த்தி, உடனே பீர்பலை அழைத்து வரச் சொன்னார்.  பீர்பல் வந்ததும் அந்த ஓலையைக் காட்டி,  ''ஒரு பானை நிறைய புத்திசாலித்தனம் வேண்டுமாமே..! அனுப்ப முடியுமா?'' என்று மன்னர் கேட்டார்.  ''பானை நிறைய என்ன..??!! ஒரு வண்டி நிறையக் கூட புத்திசாலித்தனத்தை அனுப்பலாம். ஆனால், புத்திசாலித்தனத்தை சேகரிப்பதற்கு சிறிது காலம் ஆகும். பரவாயில்லையா..!'' என்றார் பீர்பல்.  ''எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை. இந்தச் சிற்றரசனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, எவ்வளவு பணம் செலவழித்தாலும் சரி, நமக்கு பானை நிறைய புத்திசாலித்தனம் வேண்டும்..!'' என்றார் அக்பர்.  வீட்டுக்குச் சென்ற பீர்பல், பின்பக்கமுள்ள தோட்டத்துக்குச் சென்றார். அங்கு ஒரு பூசணிக்கொடி படர்ந்திருந்தது. நிறையக் காய்கள் காய்க்கத் தொடங்கியிருந்தன. ஒரு சிறிய காயை ஒரு பானைக்குள் விட்டு கட்டி வைத்தார் பீர்பல்.  நாளாக, நாளாக காய் பானைக்குள் பெரிதாகி விட்டது. அதிலிருந்து பானையை தனியாக பிரித்தெடுக்க முடியாது. பீர்பல் அந்தக் காயை பானையுடன் கொடியிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டார். அதன் வாய்ப் புறத்தில் ஒரு துணியை வைத்துக் கட்டினார். பிறகு நேரே சக்கரவர்த்தியிடம் சென்றார்.  ''அரசே, தாங்கள் விரும்பியவாறே ஒரு பானை நிறைய புத்திசாலித்தனத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பானையை ஓலையனுப்பிய சிற்றரசனுக்கு அனுப்பி வையுங்கள். இத்துடன் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அதாவது, 'பானை நிறைய புத்திசாலித்தனம் உள்ளது. பானையை உடைக்காமல், உள்ளே உள்ள பொருளை சிதையாமல் எடுத்துக்கொண்டு பானையை பத்திரமாக திரும்ப அனுப்புங்கள். பானை உடைந்தாலோ அல்லது உள்ளே உள்ள புத்திசாலித்தனம் சிதைந்தாலோ எமக்கு அபராதமாக ஐம்பதினாயிரம் பொற்காசுகள் அனுப்ப வேண்டும். இல்லையேல், உமது நாட்டின் மேல் படை எடுக்கப்படும்' என்று கடிதத்தில் எழுதியனுப்புங்கள்..,'' என்று பீர்பல் யோசனை கூறினார்.  அவ்வாறே அக்பர் சக்கரவர்த்தியும், பூசணிக்காய் அடங்கிய பானையுடன் மேற்கண்டவாறு ஒரு கடிதமும் எழுதியனுப்பினார்.  கடிதத்தையும், பொருளையும் பார்த்த சிற்றரசன் செய்வதறியாது திகைத்தான். கடிதத்தில் உள்ளவாறு ஐம்பதினாயிரம் பொற்காசுகளை எடுத்து வந்து சக்கவர்த்தியின் காலடியில் வைத்து,   ''தெரியாத்தனமாக இவ்வாறு எழுதிவிட்டேன். என்னை மன்னித்து 

 விடுங்கள் பேரரசே..!'' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

Post Top Ad