ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய் தலைமை செயலக பணிகளை பாதியில் விட்டு பர்சேஸ்சுக்கு சென்ற அதிகாரிகள், ஊழியர்கள் - Asiriyar.Net

Wednesday, December 11, 2019

ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய் தலைமை செயலக பணிகளை பாதியில் விட்டு பர்சேஸ்சுக்கு சென்ற அதிகாரிகள், ஊழியர்கள்





அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் 50க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்க அரசு பணிகளை அப்படியே போட்டுவிட்டு அரசு ஊழியர்கள் வரிசையில் நின்றனர். நாடு முழுவதும் கடந்த சில மாதமாக வெங்காயம் விலை 100ஆக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்காயம் விலை 200ஐ தொட்டது. விலை உயர்வு பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆந்திரா மற்றும் நாசிக்கில் இருந்து மலிவு விலையில் வெங்காயத்தை கொண்டு வரவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டது. அதன்படி தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் பசுமை பண்ணை நுகர்வோர் பாதுகாப்பு கடைகள் (மலிவு விலை காய்கறி கடை) மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னை மற்றும் புறநகரில் மொத்தம் 50 பசுமை பண்ணை மலிவு விலை கடைகள் மட்டுமே உள்ளன. போதுமான அளவில் கடைகள் இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் தனியார் கடைகளில் தொடர்ந்து அதிகளவிலேயே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் பசுமை பண்ணை நுகர்வோர் பாதுகாப்பு கடைகள் சார்பில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் மினி வேன் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் விற்பனை செய்யப்படுவதை கேள்விப்பட்ட 500க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிகளை அப்படியே விட்டுவிட்டு வெங்காயம் வாங்க குவிந்தனர். ேபாட்டி போட்டுக்கொண்டு வெங்காயம் வாங்கி சென்றனர். இதனால் பணிகள் பாதியில் நின்றது. எனினும் வாங்கியவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆந்திர வெங்காயம் 50க்கும், நாசிக் வெங்காயம் 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர வெங்காயம் சற்று சிறியதாகவும் தரம் குறைந்ததாகவும் இருந்தது. ஆனாலும், விலை குறைவாக இருந்ததால் ஆந்திர வெங்காயத்தை வாங்கவே அதிக ஆர்வம் காட்டினர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் தலைமை செயலகத்தில் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக வெங்காயம் விற்று தீர்ந்தது.

அரசு ஊழியர்களுக்கே அழுகிய வெங்காயம்?
சென்னை, தலைமை செயலகத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு நகரும் கடை சார்பில் தினசரி காய்கறி விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று ₹50க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது என்ற செய்தி கேள்விப்பட்டதும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கூட ஆர்வமாக வெங்காயம் வாங்க வந்தனர். ஆனால் 50க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தரம் இல்லாமல் இருந்ததுடன், அழுகிய நிலையிலும் இருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். அரசு சார்பில், அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலகத்தில் விற்பனை செய்யப்படும் வெங்காயம் இப்படி தரம் இல்லாமல் அழுகி போய் இருந்தால், பொதுமக்களுக்கு வெளியில் விற்பனை செய்யப்படும் வெங்காயம் எப்படி தரமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பினர். அதனால், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் வெங்காயம் தரமானதாக இருக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Post Top Ad