எந்தப் பள்ளியையும் மூடவில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - Asiriyar.Net

Sunday, January 27, 2019

எந்தப் பள்ளியையும் மூடவில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்




ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரணர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.  இதையடுத்து அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன போன்ற தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன.


அதிமுக அரசில் எந்தப் பள்ளிகளும் மூடவில்லை. மாறாக புதிதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட்ட நடுநிலை,  உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.  எந்தப் பள்ளியையும் மூடும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை.

ஆசிரியர்களுக்கான முழு பாதுகாப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.  அவர்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற வேண்டும். பொதுத் தேர்வுகள் நெருங்குவதால்  நீதிமன்றம்,  தமிழக அரசு,  பெற்றோர்  ஆகியோரின் ஒருங்கிணைந்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர். 

Post Top Ad