புதுக்கோட்டை,ஜன21-
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 21ந்தேதி(திங்கட்கிழமை) தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி.கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகளை சென்னையில் தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று மாலை புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கலந்துகொண்டு எல்.கே.ஜி,யு.கே.ஜி மாணவர்கள் சேர்க்கையினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார். எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கநாளான இன்று 16 குழந்தைகள் புதியதாக சேர்க்கப்பட்டனர்.இத்துடன் ஏற்கனவே அங்கன்வாடியில் உள்ள 75 குழந்தைகளும் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.அங்கன்வாடியுடன் இணைந்த அரசு மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கியுள்ள தமிழக அரசுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஜி.புஷ்பகலா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,வட்டாரக்கல்வி அலுவலர்கள்,பள்ளியின் தலைமையாசிரியர்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்,மேற்பார்வையாளர்கள்,குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.