வினோதினி... கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி. சக பிள்ளைகளைப்போலத் தானும் பள்ளிக்குக் கம்மல் அணிந்து செல்ல வேண்டும் என்பது வினோதினியின் நீண்ட நாள் கனவு. அவள் பள்ளிக்கு அனுப்பப்படுவதே பெருங்கொடுப்பினை என்றெண்ணுகிற வீட்டுச் சூழல்.
பிறகு, எங்கிருந்து கம்மல் குத்துவது? காதணி விழா நடத்துவது? ஒருநாள் தன் பள்ளித் தோழிகளிடம் இது குறித்து வருந்தியிருக்கிறார். அதை அவர்கள் ஆசிரியைகளிடம் சொல்ல, கடந்த வாரம் பள்ளிக்கூடத்திலேயே வினோதினிக்கு காதணி விழா நடத்தி முடித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள். மாணவ மாணவிகள் சீர்வரிசைத் தட்டுகளை ஏந்திவர, ஆசிரியைகள் மடியில் வினோதினிக்கு நடத்தப்பட்ட‘காதணி விழா’வுக்குத் தமிழகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்றோம். “இதற்காகக் கிடைச்ச பாராட்டுகளால் ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தாலும். இப்போ இவளுடைய எதிர்காலம் எங்களை பயமுறுத்துது. வினோதினியின் தலையை நீவியபடி பேச ஆரம்பித்தார் தலைமை ஆசிரியை கெளசல்யா, ``நான் இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது இவளின் பாட்டி இவளை முதல் வகுப்பில் கொண்டு வந்து சேர்த்தார்.
அப்பா, அம்மா இல்லாத பொண்ணு, பாட்டிதான் துணை என்பது எனக்கு அப்போதே தெரியும். அதனால், ஆரம்பத்திலிருந்தே வினோதினியின் மீது கூடுதல் கவனம் எடுத்துப்போம். யார்கிட்டயும் பெருசா பேச மாட்டா. விளையாடக்கூடப் போகாமல் வீட்டுப் பாடங்களைச் செய்வா. அவளுக்கு முதலில் படிப்புதான். கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும். ஆனால், அவளோட தலையெழுத்து? கெளசல்யாவின் குரல் மாறுகிறது.
கொஞ்ச நாளைக்கு முன்னால வினோதினியின் கிளாஸ் டீச்சர் வந்து, `எனக்கும் அப்பா அம்மா இருந்திருந்தா உங்களைப்போல காது குத்திவிட்ருப்பாங்க'ன்னு வினோதினி தன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஃபீல் பண்ணிருக்கா மிஸ். கேட்கவே கஷ்டமா இருக்கு'ன்னாங்க. எனக்கும் என்னமோபோல ஆகிருச்சு. நமக்கெல்லாம் காது குத்துறது சின்ன விஷயம்தான். ஆனால், ஒரு பொண்ணோட மனசை அது எப்படி கலைச்சிப் போட்ருக்குப் பாருங்க! அவளுக்கு இது வெறும் ஆசை மட்டும் கிடையாது. அவளுடைய நம்பிக்கை. காது குத்தவே இல்லைன்னா அவள் தன்னை இயலாதவளாகவே உணர்வா'ன்னு தோணுச்சு.
அவளுக்குக் காது குத்திவிட்டா... அப்பா அம்மா இல்லைன்னாலும் நமக்கான உலகம் இருக்குன்னு அவ நம்புவா. அந்த நம்பிக்கை அவளை உயர்த்தும்னு தோணுச்சு. அப்போதான் `பசியாறச் சோறு’ அமைப்பின் ராஜா சேது முரளியின் அறிமுகம் கிடைச்சது. அவர் இந்தப் பகுதி மக்களுக்குத் தன்னுடைய அமைப்பின் மூலமா உதவி செஞ்சுட்டு இருந்தார். அவர்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டோம், அதற்கென்ன உடனே பண்ணிரலாம். பள்ளிக்கூடத்திலேயே காது குத்த வெச்சுரலாம். ஆசிரியர்கள் நீங்கதான் அந்தக் குழந்தைக்கு அம்மா, அப்பான்னார்.
அவர் உதவுறேன்னு சொன்னதும் எங்களுக்குப் பயங்கர சந்தோஷம். ஆனால், பள்ளிக்கூடத்தில் காதணி விழா நடத்துறது ஏதாவது பிரச்னை ஆகுமோ'ன்னு பயமா இருந்துச்சு. எங்க பி.டி.ஓ மேடத்திடம் இந்தத் தகவலைச் சொன்னேன். ரொம்ப நல்ல விஷயம்; இதுக்கு ஏன் தயங்கறீங்க? நானும் ஃபங்ஷனுக்கு வர்றேன். நல்லா பண்ணுவோம்ன்னாங்க.
அவளோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் சீர்வரிசைத் தட்டுகளைத் தூக்கி வந்து, எங்களோட மடியில உட்கார வெச்சு காது குத்தினோம். இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்களெல்லாம், ஏதாவது ஒண்ணுன்னா அப்பா, அம்மா'ன்னு சொல்லி அழுகிறதுக்குக்கூட நாதி இல்லாத பொண்ணுக்கு நீங்க செஞ்ச காரியம் கோடி புண்ணியம்னு வாழ்த்தினாங்க. அதுக்குப் பிறகுதான், இந்தப் பொண்ணோட எதிர்காலம் என்ன ஆகுமோ'ன்னு எங்களுக்குப் பயம் வந்திருச்சு'' என்றவரிடம், இந்தப் பொண்ணோட அப்பா அம்மாவுக்கு என்னாச்சு? என்று கேட்டோம்.
அவகிட்டயே கேளுங்க என்று வினோதினியை நம் முன் நிறுத்தினார், ``அப்பா செத்துட்டார்ண்ணே... அம்மா எங்கே’ன்னு தெரியலை. பாட்டிதான் என்னை வளர்க்குறாங்க’’ என்ற வினோதியின் கம்மிய குரல் நெஞ்சை அறுத்தது. அதை மறைத்தபடி 'காது குத்தியாச்சு, இப்போ சந்தோஷமா வினோதினி?' 'சந்தோஷம்ண்ணே!' அவ்வளவுதான் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
`சரி, உங்க பாட்டிகிட்ட பேசணும் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறியா?' எனக் கேட்டதற்கு வேண்டாம் என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.
`ஏன் பாப்பா என்ன ஆச்சு? வீட்டுக்கு ஏன் வேணாம். கிளாஸுக்குப் போகணுமா? பாட்டி திட்டுவாங்களா? நாங்க உன் வீட்டுக்கு வரக்கூடாதா? என நாமும் ஆசிரியைகளும் எப்படியெல்லாம் கேட்டும் பலனில்லை.
`எங்க வீட்டுக்கு வராதீங்கண்ணே...’ என வினோதினி அழ ஆரம்பித்துவிட்டாள். அந்தக் கண்ணீர் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. சரி, வீட்டுக்குப் போக வேண்டாம். நீ கிளாஸுக்குப் போ…' வினோதினியை வகுப்புக்கு அனுப்பிவிட்டு. நான் அவர் வீட்டுக்குச் சென்றேன்.
வினோதினியின் பாட்டி பாப்பம்மாள், ``நாலு பசங்க, மூணு பொண்ணுங்க'ன்னு ஏழுபேரை பெத்து வளர்த்தவ நான். இது மூத்தவன் பொண்ணு. அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க. மொத பொண்ணு பிறந்த கொஞ்ச நாள்லயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
அந்தக் கோவத்தில் இவங்க அம்மா அவங்க வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டா. ரெண்டாவது சம்சாரத்துக்கு ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. என்ன சண்டையோ சச்சரவோ தெரியலை அவளும் கோவிச்சு தன் பிள்ளைகளைத் தூக்கிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. அதுக்குப் பிறகு, முதல் சம்சாரத்தை சமாதானம் பண்ணி அழைச்சுட்டு வந்து வாழ்ந்தான். முதல் குழந்தையைத் தன் அம்மாவீட்லயே படிக்க வெச்சிருந்தா.
இங்கே வந்து நல்லா வாழ்ந்தாங்க, அப்போதான் வினோதினி பொறந்தா. இவளுக்கு ஒரு வயசுகூட ஆகலை. அவங்க அப்பன் உடம்புக்கு முடியாமல் செத்துப் போய்ட்டான். இவ அம்மா மனசில் என்ன நினைச்சாலோ தெரியலை. இந்தக் குழந்தையை இங்கேயே போட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் போயிட்டா. இதெல்லாம் என் மகன் பண்ணின பாவம். அதை நான்தானே கழுவணும். மத்த பிள்ளைகளோட ஆதரவும் இல்லை. இந்தப் பிள்ளையை எப்படியாவது வளர்த்து ஆளாக்கிரணும். எனக்கு வயசு 70-க்கும் மேல ஆச்சு. வேலைக்கெல்லாம் போக முடியலை.
எனக்கு மாசாமாசம் கிடைக்கும் 1,000 ரூபா உதவித்தொகையும், ரேஷன் அரிசியும் என்னையும் என் பேத்தியையும் உயிர் வாழ வைக்குது' என்ற பாட்டியின் கண்கள் கண்ணீர் குளமாகிறது. சின்ன பிள்ளையானாலும் அவளுக்கு எல்லாம் தெரியும். அவளுக்கு யாருமில்லை என்கிற ஆற்றாமை அதனால்தான் வீட்டுக்கு வர வேண்டாமென்று சொல்லியிருப்பா. நீங்க ஏதும் தப்பா நினைக்காதீங்க' என்று அவர் முடிக்க நான் அங்கிருந்து கிளம்பினோம்.
வினோதினியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நம் கண்களையும் கலங்கச் செய்தது.