அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு: செங்கோட்டையன் - Asiriyar.Net

Monday, January 21, 2019

அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு: செங்கோட்டையன்





ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வட ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு சுற்றுலா அனுப்புவதற்காக, அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவர்களை, பள்ளி கல்வி துறை தேர்வு செய்தது. இவர்களை, சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று நடந்தது. பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன், மாணவர்களை வாழ்த்தி, சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தார்.அப்போது, மாணவர்களிடம் பேசிய அமைச்சர், ''பின்லாந்தில் அதிக குளிர் நிலவுவதால், உரிய பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஜன., 20ல் சுற்றுலா முடிந்து வரும்போது, உங்களை வரவேற்பேன்,'' என்றார்.பின், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:ஆண்டுக்கு, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 100 மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலா செல்ல, தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில், இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, அதிக மாணவர்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், சமூக நலத்துறையுடன் இணைந்து, அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. முதல்வர் பழனிசாமி, இந்த திட்டத்தை, இன்று துவங்கி வைக்கிறார். பயிற்சிகள், ஜூன் முதல் முழுமையாக வழங்கப்படும்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் எடுக்க, தொடக்க பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பத்து மாணவர்களுக்கும் குறைவாக, 1,225 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை, கே.ஜி., வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, சில ஆசிரியர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒத்துழைப்பு தரும்படி, அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவதற்கு, உரிய ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளோம். அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad