பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 4, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

 




தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.


இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.


மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.


2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, 


அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

03.03.2022




Post Top Ad