மார்ச் 28, 29 பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Saturday, March 26, 2022

மார்ச் 28, 29 பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு உத்தரவு

 

பல்வேறு காரணங்களை கூறி வரும் 28,29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சேவை துறையான மின்துறை, போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறையின் ஊழியர்களுக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது, போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு  விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெறுவது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி நாடு முழுவதும் வரும் 28 மற்றும்  29ம் தேதிகளில் மத்தியஅரசை கண்டித்து பொது வேலை நிறுத்தம்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு  உழியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என அச்சங்கத்தில் துணை பொதுச்செயலாளர்  எம்.சீனிவாசன்  அறிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு போக்குவரத்து  கழகத்தின் முக்கிய தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி  உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு கொடுத்துள்ளது.


இதனால் முழு  வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில்  தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்ட  அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு  செல்வோர், அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கும் சூழல் நிலவி வருகிறது.  மேலும், மருத்துவமனைக்கு செல்வோர், அத்தியாவசிய பணிகள் கடுமையாக  பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியஅரசு ஊழியர்கள் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் எந்தவிதமான விடுமுறையும் வழங்கப்பட மாட்டாது. மேலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய விவரங்களை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும். ‘நோ ஒர்க்; நோ பே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார் பணிக்கு வந்தார்கள் என்ற தகவல்களை அந்தந்த துறை தலைவர்கள் காலை 10.30 மணிக்கு தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல, அனைத்து மண்டல போக்குவரத்து கழகத்திற்கும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ள அன்றைய தினங்களில் விடுப்பு அளிக்கப்பட்ட ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், 28,29 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும், போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பணிக்கு வராத தொழிலாளர்களை ‘ஆப்சென்ட்’ என்று வருகை பதிவேற்றில் மார்க் செய்யப்பட்டு அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதோடு இல்லாமல், அன்றைய தினங்களில் பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கையை அனைத்து போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உடனே அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து போக்குவரத்து மண்டல மேலாளர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் சுற்றிக்கையை தொடர்ந்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரும் அவரச ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பணிக்கு வராத தொழிலாளர்களை ‘அப்சென்ட்’ என்று வருகை பதிவேற்றில் மார்க் செய்யப்பட்டு அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.












No comments:

Post a Comment

Post Top Ad