அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை ஏன்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 25, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை ஏன்?

அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து தவறுதலான பார்வையும் தவறுதலான புரிதலும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டுமே போராடுவதாக சமூகவலைதளங்களில் பலர் குரல் எழுப்புவதை பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது எதிர்காலத்தில் அரசு வேலை என்பது இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டம். இது உண்மையில் உரிமைக்கான போராட்டமாகவே பார்க்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை குறைத்து, அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்தால் சிறந்த கல்வி தனது பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெற்றோரிடம் விதைத்து விட்டார்கள் . இதை செய்தது யார்?  ஆளும் ஆட்சியாளர்கள் தான். தனியார் பள்ளிகளுக்கு கண்ட படி அனுமதி கொடுத்து முதல் தவறு. இது ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவில்லை. 


பதினைந்து , இருபது வருடங்களுக்கு முன்பு அரசு பள்ளியில் ஆசிரியர்களின் மகனும், ஏழை தாயின் மகனும் ஒன்றாகத்தான் படித்தார்கள்  . ஆனால் இப்போது அப்படி இல்லை. தனியார் பள்ளிகள் வருமானத்துக்காக குழந்தைகளை கம்ப்யூட்டர் ஹாட் டிஸ்க் போல் மாற்றி, தாங்கள் தான் சிறந்த பள்ளி என மார்கெட்டிங் செய்தார்கள். கூடவே   அரசு பள்ளியில் சேர்ந்தால்  குழந்தைக்கு ஆங்கில மொழி திறமை சரியாக வராமல் போகும் என பயத்தை பெற்றோருக்கு உருவாக்கி விட்டார்கள். இதனால் இப்போது யாரும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க முன்வருவதில்லை. 


 எல்லாத்துக்கும் காரணம் மார்கெட்டிங் .  

இருபது வருடங்களுக்கு முன்பு 20 ரூபாய் கூட செலவழித்து பள்ளியில் படிக்காத பெற்றோர் இன்று வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். இன்று தனியார் பள்ளிகளில் நடத்துவது பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது பினாமிகள் தான். இந்த வருமானத்தை இழக்க எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை அதனால் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறான கருத்துக்கள் பொதுமக்களிடையே பரப்பப்படுகிறது.




இது ஒருபுறம் எனில் அரசு பள்ளிகளை ஒழித்தால் எதிர்காலத்தில் படித்து விட்டு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் வேலை என்பது இல்லாமல் போய்விடும். அரசு பள்ளி, அரசு வேலை, அரசு பேருந்து என்பது இல்லாமல் போனால், படித்துவிட்டு வேலை தேடும் மக்களுக்கு ஒரு இயல்பான நிரந்தர வாழ்வாதாரம் என்பது இல்லாமல் போய்விடும்.  அதன்பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆதிக்கத்தின் கீழ் கொத்தடிமைகள் போல் மக்கள் வாழ வேண்டிய அவலம் ஏற்பட்டுவிடும்.

லஞ்சத்தை தாறுமாறாக வாங்கிக்கொண்டு கண்டபடி, தனியார் பேருந்துகள் , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது என்பது  எதிர்காலத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்த போராட்டத்தை ஊதிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் வருங்கால இளைய சமுதாயத்தினர் வேலைவாய்ப்புக்கு ஏங்கி தவிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டமாக பார்க்க வேண்டும்.

Post Top Ad