பார்வை மற்றும் பொருளுக்கிணங்க, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், 2023-24ஆம் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக, ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
தற்பொழுது அடுத்த கட்டமாக, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஜுன்-07ஆம் தேதி முதல் இரண்டு வார காலத்திற்குள் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி "அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்” என்று பெயர் சூட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்கள், எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை, பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக, அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் வென்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற மாணவர் விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற வேண்டும்.
இவ்விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்பேரணி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக நடத்திடுமாறு, அனைத்து அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment