யார் இந்த சிவ்தாஸ் மீனா?
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதால் தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார். 1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சீபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற உடனே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு மத்திய வாரியத்தின் சேர்மனாக பணி புரிந்த சிவ்தாஸ் மீனாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மாநில அரசு பணிக்குத் திருப்பி அனுப்பியது.
முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைகு பாத்திரமாகவும், விரட்டி வேலை வாங்கக்கூடியவராகவும், நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக பணியாற்றக்கூடியவராகவும் அறியப்படும் சிவ்தாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.இவர் தான் தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராகி உள்ளார்.
No comments:
Post a Comment