என் பெயரும் இறையன்பு தான் சார் - தலைமை செயலாளருக்கு 6ம் வகுப்பு மாணவன் எழுதிய உருக்கமான கடிதம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 29, 2023

என் பெயரும் இறையன்பு தான் சார் - தலைமை செயலாளருக்கு 6ம் வகுப்பு மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்

 தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு, 6ம் வகுப்பு மாணவன் ஒருவர் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு கடிதம் அனுப்பி உள்ளார்.


தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமான ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில், சிவ்தாஸ் மீனா அடுத்த தலைமை செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.


இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்க்கு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் அ.இறையன்பு தன் கைப்பட எழுதி அனுப்பி இருந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:


என் பெயர் இறையன்பு. நான் 6-ம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற போவதாக என் பெற்றோர் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர்.


உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வகுப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.


அய்யா நானும், எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. நடப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. பலர் வழுக்கிவிழும் நிலையும் ஏற்படுகிறது.


தயவு கூர்ந்து எங்கள் தெருவுக்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அந்த மாணவர் கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் மாணவர் இறையன்பு தன் பெயர் பொறிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை நகலையும் இணைத்து அனுப்பி இருந்துள்ளார்.


Post Top Ad