ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என அழைக்க காரணம் என்ன ? விரிவான விளக்கம் - Asiriyar.Net

Friday, June 30, 2023

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என அழைக்க காரணம் என்ன ? விரிவான விளக்கம்

 




ஆறு பத்துகளை அறுபது என்கிறோம். ஏழு பத்துகளை எழுபது என்கிறோம். ஆனால், ஒன்பது பத்துகளை ஏன் தொண்ணூறு என்கிறோம் ? அவ்வாறே, ஐந்து நூறுகளை ஐந்நூறு என்கிறோம். எட்டு நூறுகளை எண்ணூறு என்கிறோம். ஆனால் ஒன்பது நூறுகளை ஏன் தொள்ளாயிரம் என்கிறோம் ?


ஒன்பது பத்துகளுக்கு நூற்றின் பெயரைப் பின்னொட்டாகப் பயன்படுத்தி ‘தொண்ணூறு’ என்று அழைக்கிறோம். ஒன்பது நூறுகளுக்கு ஆயிரத்தைப் பின்னொட்டாகப் பயன்படுத்தி ‘தொள்ளாயிரம்’ என்கிறோம். எண்ணுப் பெயர் வரிசையில் இது மிகவும் முரணாக இருக்கிறதே, என்ன காரணமாக இருக்கும் ?


ஒன்பது என்பது பிற்காலத்தில் வந்த வழக்கு. முற்காலத்தில் ஒன்பது என்ற எண்ணைத் ‘தொண்டு’ என்று வழங்கினார்கள்.


தொள்ளு என்ற வினைச்சொல்லும் இருக்கிறது. தொள்ளுவது என்பதற்கு நெகிழ்வது, துளைப்பது என்று பொருள். நிலக்கடலைப் பருப்பை மூடியிருக்கும் மேற்றோல் உள்ளிருக்கும் பருப்பை விட்டு நெகிழ்ந்துவிட்டால் அதைத் ‘தொள்ளி’ என்பார்கள். இன்றைக்கும் கொங்கு நாட்டுப் புன்செய்ப் பகுதிகளில் ‘கல்லக்கா தொளிக்கப் போறோம்” என்பார்கள். கடலைக்காயைத் தோலுரிப்பதை அவ்வாறு கூறுகிறார்கள். ஆக, தொள்ளுதல் என்னும் ஒரு வினைச்சொல் பேச்சு வழக்கிலும் எழுத்தில் அருஞ்சொல்லாகவும் பயன்பட்டு வருகிறது என்பது கண்கூடு.


ஒன்றுகள் பத்துகளை நோக்கிச் செல்லும்போது ஒருவகையில் நெகிழ்ந்து கொடுக்கிறது. ஒன்றாமிடம் பத்தாமிடத்தைத் துளைக்கிறது என்றும் வைத்துக்கொள்ளலாம். அதனால் அத்தகைய வளர்ச்சிக்குரிய இணைப்பு எண்ணாகத் தோன்றுவதைத் ‘தொண்டு’ என்றார்கள். அதுபோன்ற இணைப்பு நிகழ்வதால்தான், தலைப்பகுதியை உடற்பகுதியோடு சேர்க்கும் இணைவுப் பகுதியைத் ‘தொண்டை’ என்கிறோம். ஆக, ஒன்றுகள் பத்துகளோடு சேருமிடம் தொண்டு. இந்தத் தொண்டு வழக்கொழிந்து ஒன்பது ஆகிவிட்டது. ஆனால், நூற்றுக்கு முன்பு பத்துகளோடும், ஆயிரத்துக்கு முன்பு நூறுகளோடும் அது வழக்கு ஒழியாமல் அப்படியே இருக்கிறது.


பத்துகள் நூறுகளோடு சேர்வதற்கு முன்னுள்ள பத்து எண்களைத் தொண்ணூறு என்று அழைக்கிறோம். நெகிழ்ந்த நூறு என்பதுதான் அதன் பொருள். நூற்றுக்கு அருகில் ஒட்டும் தொலைவில் இவ்வெண்கள் வந்துவிட்டன. பத்துகள் முடிந்து இனி அடுத்ததாய் நூறுகள் தோன்றவுள்ளன என்பதைத் தொண்ணூறு உணர்த்துகிறது.


இதேதான் தொள்ளாயிரத்திற்கும். நூறுகள் நிறைந்துவிட்டன. இனி அடுத்து ஆயிரம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் பொருளில் தோன்றிய சொல்தான் தொள்ளாயிரம். ஆயிரம் இனி வரப்போகிறது. அதற்கேற்ற மாற்றத்தை ஒன்பதாம் நூறுகளிலேயே உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்தான் தொள்ளாயிரம் என்று முன்னதாய்க் கூறுகிறார்கள்.


தொண்டு, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் நல்ல பொருளுடைய பழைய வழக்கு ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று தற்போது மாறிவிட்டது. நாம் ஒன்பதை மட்டுமே நினைத்துக்கொண்டு தொண்ணூறு தொள்ளாயிரம் ஏன் வந்தது என்று குழப்பிக்கொள்கிறோம்.


- கவிஞர் மகுடேசுவரன்   

(சில்லாண்டுகட்கு முன்னர் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை)


No comments:

Post a Comment

Post Top Ad