கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவ்யா (17), கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை பள்ளி முடிந்ததும், கெலமங்கலத்திலிருந்து தர்மபுரி சென்ற அரசு பஸ்சில் ஏறி சினிகிரிப்பள்ளிக்கு வந்துள்ளார். அங்குள்ள ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி இருக்கையில் இருந்து எழுந்து, யாரும் எதிர்பார்க்காத நேரம் திடீரென ஓடும் பஸ்சில் இருந்து வெளியே குதித்துள்ளார்.
கீழே விழுந்த மாணவியின் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியது. இதனால், படுகாயமடைந்த மாணவி வலியால் துடித்தார். உடனே, சக பயணிகள் சத்தம்போடவே பஸ் நிறுத்தப்பட்டது. உடனடியாக மாணவியை மீட்டு அதே பஸ்சில் ஏற்றி உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பஸ் டிரைவர் வெங்கடேசன் (58) மற்றும் கண்டக்டர் குமார் (46) ஆகியோர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு சொந்த ஜாமீனில் விடுவித்தனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment