அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பணிமூப்பு பட்டியலில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள், ௨௦௨௧ டிசம்பர் 31ல் துவங்கின. ஜன., 12 வரை 'ஆன்லைன்' வழியில் விண்ணப்ப பதிவு நடந்தது. நேற்று முன்தினம் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது; 58 ஆயிரம் பேர் இடம் பிடித்துள்ளனர். பணி மூப்பில் ஆட்சேபனை உள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து, இன்று இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நாளை மறுநாள் பணியிட மாறுதல் 'ஆன்லைன்' வழியில் துவங்க உள்ளது. முதல் கட்டமாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்படும். பின், படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும் இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பணிமூப்பு பட்டியலை பார்த்த ஆசிரியர்களில் சிலர், தங்களுடைய பணிமூப்பு வரிசை சரியாக இடம் பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
குறைந்த ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள் பலர், பணி மூப்பில் முன்னிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். இதை சரிசெய்ய மனு அளித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஓராண்டுக்கு குறைவாக ஒரே இடத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் மனுக்களை, பள்ளி கல்வி துறை நிராகரித்துள்ளது.
No comments:
Post a Comment