பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 25, 2022

பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை.!

 




தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. மறுபுறம் ஒமிக்ரானும் மிரட்ட தொடங்கியது. இதனால், கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உச்சத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஆனால், கோவை, குமரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாமா என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 



இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் நந்தகுமார் தலைமையில் பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வியின் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா, அதற்கான தேவை உள்ளதா என விவாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், புதிதாக அறிமுகமான திட்டங்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தலைமை செயலகத்திலும், பள்ளிகளை பிப்ரவரி முதல் திறப்பது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஊரடங்கின் அடுத்த நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அடுத்த ஆலோசனை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad