10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 25, 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சர்

 




தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது நிச்சயம் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் கூறியதாவது, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.இதுபோன்று இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம்  தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு விசாரணை நடைபெறும். காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


எனவே தயவு கூர்ந்து, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை.


இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளியில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


மேலும், பொதுத் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அதனை உறுதி செய்து வருகிறோம். அது தொடர்பாக முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு என்ன ஆலோசனை வருகிறதோ  அதைப் பின்பற்றி செயல்படுவோம்.


வரும் மே மாதத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Post Top Ad