6,177 அரசுப் பள்ளிகளில் ஆலோசனை மையங்கள் அமைக்க அரசு ஆணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 30, 2022

6,177 அரசுப் பள்ளிகளில் ஆலோசனை மையங்கள் அமைக்க அரசு ஆணை

 




அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக 6,177 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.


இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ 3.08 கோடி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித்துறைச் செயலா் காகா்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளாா்.


அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு முறையாக கொண்டு சோ்ப்பதற்கு ஏதுவாக தொடா் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவா்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தொடா் நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்’ என சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.


இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளாா். அதனை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு 6,177 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆலோசனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று தொடா்நெறிப்படுத்தும் முறையினை ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்துக்காக ஆகும் செலவினத் தொகை ரூ.3 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பயிலரங்குகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கான பயிற்சி கட்டகங்கள் தயாரித்தல், ஆலோசனை- வழிகாட்டுதல் தளம் ஏற்படுத்துதல், ஆசிரியா்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகள் வழங்குதல், மாணவா்களுக்கான கையேடுகள் தயாரித்தல், பாடத் திட்டம் வடிவமைத்தல், பயிற்சி கட்டகங்கள் உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad