தமிழகத்தில் 2009க்கு பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் களையப்படாததால் 20 ஆயிரம் பேர் 12 ஆண்டுகளாக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் இழந்து வருகின்றனர்.
மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளால் 1.6.2009 வரை ஆறு ஊதியக் குழுக்கள் அமல்படுத்தப்பட்டன. மத்தியில் 2008 ல் அமல்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழு தமிழகத்தில் 1.6.2009ல் அமல்படுத்தப்பட்டது.இதில் 31.5.2009க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.8370 எனவும் அதன் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ. 5200 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதனால் 1.6.2009க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரே கல்வித் தகுதி ஒரே பணியாக இருந்தும் இரு வேறு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த முரண்பாடுகள் ஏழாவது ஊதியக் குழுக்களிலும் சரிசெய்யப்படவில்லை.
இதன் எதிரொலியாக தற்போது ஒரே பள்ளியில் பணியாற்றினாலும் ஒரு நாள் வித்தியாசத்தில் (மே 31 - ஜூன்1 ) பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை சம்பள இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான 'சம வேலைக்கு சம சம்பளம்' வழங்க வேண்டும் என வலியுறுத்தி 12 ஆண்டுகளாக போராட்டம் தொடர்கிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான குழு மற்றும் அதன் பின் அமைந்த மூன்று நபர்கள் கொண்ட குழுக்களால் இதுபோல் உள்ள 50 பிரிவினருக்கு முரண்பாடுகள் சரிசெய்யப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் தீர்வு கிடைக்கவில்லை. சென்னையில் 2018ல் நடந்த உண்ணாவிரதத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எங்களை சந்தித்து 'உங்களின் இந்த நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என குரல் கொடுத்தார். இது தொடர்பாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 311 வது வாக்குறுதியாக இடம் பெற்றது. ஆனாலும் இதுவரை அது குறித்து கவனிக்கப்படவில்லை. முரண்பாட்டை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment