"பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயிலவேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: "அன்புமிக்க எனது தமிழக சகோதர, சகோதரிகளே,வணக்கம். மங்களகரமான நமது 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துகளையும் என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் தேசியப் பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில், தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும் இன்னல்களுக்காகவும் நினைவுகூர்கிறோம். வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நமது அவசரத் தேவை. அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையை தோற்றுவிக்கின்றன.
தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளால் சேர முடியாது. அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கையாக இருக்கின்றன.
மேலும், நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகதான் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment