டிசம்பரில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை? - Asiriyar.Net

Wednesday, November 4, 2020

டிசம்பரில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை?

 





தமிழகத்தின் தற்போதையை சூழலில் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, டிசம்பர் மாதம்  திறக்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.



அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. மேலும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர். மேலும், பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றுகளை பள்ளிகளில் இருந்து வாங்கியும் சென்றுவிட்டனர்.


இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும்  நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் பள்ளிகளை இப்போதைக்கு திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்து இருந்தார். ஆனால், பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப முடியாது என்று பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்ப தமிழகத்தில் நாள் தோறும் கொரோனா தொற்று தற்போது வரை 2500 என்ற அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கலவித்துறை அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில்,  பள்ளிகள் திறப்பது குறி்த்தும் ஆலோசிக்கப்பட்டது.


அப்போது, பள்ளிகள் திறப்பதற்கு தற்போது ஏற்ற நேரம் கிடையாது  என்று கல்விஅதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று வரை 2500 பேருக்கு கொரோனா தொற்று பரவல் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கல்லூரிகள் திறப்பையும் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 



வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகரிக்கும் போது கல்லூரி, பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், பள்ளி, கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கல்விஅதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தமிழக முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் தேதி டிசம்பருக்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








No comments:

Post a Comment

Post Top Ad