வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அது புயலாக வலுப்பெற்றால் புரெவி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் கரையை கடந்த பிறகு, கடந்த 2 நாட்களாக, நாகை, கடலூர், சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 4 மணிநேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் குளங்கள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்தது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும், 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், வரும் 30ஆம் தேதி தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை இருக்கும் என்பதால், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை அல்லது அதீத கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment