CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை - Asiriyar.Net

Wednesday, January 30, 2019

CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி, ஜாக்டோ ஜியோ தவறான பரப்புரைமேற்கொண்டு வருவதாக கூறியிருக்கும் தமிழ்நாடு அரசு, அந்த நிதியை கையாளும் முறை குறித்து, விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை, செவ்வாய்க்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், CPSஎன சுருங்க அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி பராமரிப்பு பற்றி பல்வேறுதவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, கூறப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டத்தின் படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில், 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக, 10 விழுக்காடு தொகையை அரசு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகை தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிதி அவ்வப்போது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித்தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில், அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்புத் தொகை என தலா 8 ஆயிரத்து 283 கோடியே 97 லட்ச ரூபாயுடன், வட்டி 5ஆயிரத்து 252 கோடியே 90 லட்ச ரூபாயும் என, ஆக மொத்தம் 21 ஆயிரத்து 821 கோடி ரூபாய் பொதுக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பதன் விபரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

Post Top Ad